அரிசியை சமைப்பதற்கு முன் ஊற வைத்து பயன்படுத்தும் பாரம்பரிய நடைமுறை தற்போது மீண்டும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சமகால வாழ்க்கை முறையில் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் பலர் அரிசியை கழுவிய உடனே சமைக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும், அரிசியை ஊற வைத்து சமைப்பது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் அரிசியை சமைப்பதற்கு முன்பாக தண்ணீரில் ஊற வைத்து வந்தனர். இது சமையல் நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கும் உதவுவதாக கருதப்படுகிறது.
அரிசியின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் ஃபைடிக் அமிலம் என்ற இயற்கைச் சேர்மம், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய தாதுக்களை உடல் முழுமையாக உறிஞ்சுவதைத் தடுக்கக்கூடும். அரிசியை சில மணி நேரங்கள் ஊற வைத்து சமைப்பதன் மூலம் இந்த ஃபைடிக் அமிலத்தின் தாக்கம் குறைவதுடன், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், அரிசி ஊற வைக்கப்படும் போது அதிலுள்ள சில இயற்கை நொதிச் செயல்பாடுகள் தொடங்குகின்றன. இதனால் மாவுச்சத்து உடலால் எளிதில் செரிமானம் செய்யக்கூடிய வடிவமாக மாறுகிறது. இதன் காரணமாக வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதாக கூறப்படுகிறது.
அதேபோல், நீரிழிவு நோயாளிகளுக்கும் இந்த நடைமுறை பயனுள்ளதாக இருக்கலாம் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அரிசியை ஊற வைத்து சமைப்பதன் மூலம் அதிலுள்ள மாவுச்சத்தின் செயல்பாடு ஓரளவு மாறுவதால், உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், அரிசியை ஊற வைத்து சமைக்கும் பாரம்பரிய நடைமுறை சுவை மற்றும் சமையல் வசதியை மட்டுமல்லாமல், உடல்நல பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றும் ஒரு நல்ல உணவுப் பழக்கமாகக் கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக