முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற குறுகிய உரையாடல், சமூக வலைத்தளங்களில் பரவி அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவின் மகனின் இறுதிக் கிரியையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், மகிந்த ராஜபக்சவுடன் சுனில் வட்டகல நெருக்கமாக உரையாடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, இருவரும் எந்த விடயங்களைப் பற்றி பேசினர் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரவலாக எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் வினவியபோது, அந்தக் காணொளியை தாமும் பார்த்ததாகக் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச, அச்சமயம் என்ன பேசப்பட்டது என்பது தமக்கு நினைவில் இல்லை என தெரிவித்துள்ளார். அவரது இந்த பதில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
மறுபுறம், பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, சமூக ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை தேவையற்ற அளவுக்கு பெரிதுபடுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான தகவல்களை மட்டுமே மகிந்த ராஜபக்சவிடம் பகிர்ந்ததாகவும், அரசியல் அல்லது அரசாங்கம் தொடர்பான எந்தவொரு இரகசிய கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியல் எதிரணியினரும் ஆளும் தரப்பினரும் ஒரே நிகழ்வில் சந்தித்து உரையாடுவது சாதாரணமானதாக இருந்தாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இத்தகைய காட்சிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக