இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90 சதவீத பங்களிப்பை 'லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்' (Litro Gas Lanka Limited) நிறுவனம் கொண்டுள்ளது என்றும், நிறுவனம் மாதத்திற்கு சுமார் 20 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை நிரப்புகிறது என்றும் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
'லாஃப் கேஸ்' (Laugfs Gas) நிறுவனத்தின் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், பாராளுமன்றத்தில் இன்று (14) அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
'லாப் கேஸ்' நிறுவனம் மாதத்திற்கு சுமார் 3 இலட்சம் சிலிண்டர்களை மட்டுமே நிரப்புகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தற்போதைய சந்தை தேவையை கருத்தில் கொண்டு, ஒரு இலட்சம் புதிய 'லிட்ரோ' எரிவாயு சிலிண்டர்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 35,000 சிலிண்டர்கள் டிசம்பர் மாதத்திற்குள் வந்து சேரும் என்றும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்குப் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எரிவாயு விலை உயர்வு என்பது, விலைவாசி உயர்வது போன்ற ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், இந்தச் சிக்கலைத் தீர்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கூறிய அமைச்சர் ஹந்துன்நெத்தி, நுகர்வோர் தாங்கள் விரும்பும் எந்த நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டரையும் தேர்ந்தெடுத்து வாங்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
இத்தகைய நடைமுறையைச் செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தின் எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும், 'லிட்ரோ கேஸ்' நிறுவனம் மூலமாக இது மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனவே, 'லாஃப் கேஸ்' நிறுவனத்தின் விலை உயர்வு என்பது நாடு தழுவிய எரிவாயு தொடர்பான சிக்கல் அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய நெருக்கடியாகச் சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சாட்டினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக