கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதான சந்தேகநபர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய 33 வயதுடைய பௌதீக சிகிச்சை நிபுணரான ஷம்யா தர்ஷனி கடந்த 17 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், கொலையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பெண்ணின் காதலனை கைது செய்வதற்காக பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் மற்றும் பிற குற்றச்செயல்களைக் கொண்ட விரிவான வலையமைப்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட அறிக்கையின் அடிப்படையில், சந்தேகநபர் ஹொரம்பாவ, கொஸ்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி நடவடிக்கைகளில் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்களிடம் இருந்து பணம் மோசடி செய்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாக கூறி நிதி வசூலித்தல் மற்றும் வாகன இறக்குமதி தொடர்பான மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ், சந்தேகநபருக்கு எதிராக நாட்டின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், திருமண வாக்குறுதி வழங்கி 11.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்தமை மற்றும் மோட்டார் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பாக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பேலியகொட பொலிஸாராலும் மோசடி விசாரணைப் பிரிவினராலும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் திருமண மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரது மனைவியையும் மையப்படுத்தி பல நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக