ஜனாதிபதி ஒருவரின் பயணங்களை 'உத்தியோகபூர்வமானது' மற்றும் 'தனிப்பட்டது' எனப் பிரித்துப் பார்க்க முடியாது என்று சுட்டிக்காட்டிய உதய கம்மன்பில, ஜனாதிபதி என்பவர் 24 மணிநேரமும் கடமையில் இருக்கும் ஒரு நபர் என்று குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்க தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியையும், பாதுகாப்பையும் தவறாகப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அவர், இதனை ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகவே பார்க்க வேண்டும் என்றார்.
ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றதை ஒரு தனியார் நிகழ்வு என்று அரசு தரப்பு வாதிட்டால், அதே தர்க்கத்தின்படி பிரதமர் ஹரிணி அமரசூரிய உலகப் பொருளாதார மாநாட்டுக்குச் சென்றதும் ஒரு தனியார் நிகழ்வாகவே கருதப்பட வேண்டும் என்றும், அது பொது நிதியைப் பயன்படுத்திய குற்றமாக மாறிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கொண்ட ஜப்பான் பயணம் மற்றும் அனுராதபுர விஜயம் போன்றவையும் அரசியல் சார்ந்த பயணங்களே என்று குறிப்பிட்ட அவர், அந்தப் பயணங்களின் போதும் அரச வாகனங்களும் பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டதை நினைவுபடுத்தினார். ரணில் விக்ரமசிங்கவை இலக்கு வைத்துத் தொடரப்படும் இத்தகைய சட்ட நடவடிக்கைகள், தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்காகத் தாமே தோண்டிக்கொள்ளும் குழியாக அமையும் என்றும், இதன் விளைவாக இவர்களே எதிர்காலத்தில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்றும் உதய கம்மன்பில பகிரங்கமாக எச்சரித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக