ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்கி வருகிறது.
இந்த போரின் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு நிலைமை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
இதனால் சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மத்திய கிழக்கிற்கு சென்றிருந்த பல பயணிகள் தங்க இடமின்றி துபாயில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய நடிகர் Sonu Sood துபாயில் தங்க இடமின்றி தவிக்கும் பயணிகளுக்கு இலவச தங்குமிடம் ஏற்பாடு செய்து தருவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “போர் காரணமாக பல பயணிகள் துபாயில் சிக்கித் தவிக்கின்றனர். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ தங்குவதற்கு இடமின்றி இருந்தால், பாதுகாப்பான தங்குமிடத்தை இலவசமாக வழங்க தயார். எந்த தேசியம் என்றாலும் பரவாயில்லை; எந்த நிபந்தனையும் இல்லை. மனிதாபிமான உதவியே முக்கியம்,” என தெரிவித்துள்ளார்.
மேலும் உதவி தேவைப்படுபவர்கள் Instagram இல் @dugastaproperties என்ற கணக்கிற்கு நேரடியாக தகவல் அனுப்புமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திலும் பலருக்கு உதவி செய்ததன் மூலம் Sonu Sood இந்தியா முழுவதும் மனிதாபிமான சேவைகளுக்காக பெரும் பாராட்டைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக