வவுனியா, சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (02.09.2026) இடம்பெற்றுள்ளது.
சாளம்பைக்குளம் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக வீதியோரத்தில் அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், மற்றொருவர் சோளம் வாங்கிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது மன்னார் பகுதியில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சோளம் விற்பனை செய்த நபர் மற்றும் சோளம் வாங்கிக் கொண்டிருந்த நபர் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
எனினும், சோளம் வாங்கச் சென்ற சாளம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரகீம் மஜீத் (31) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக