அம்பாந்தோட்டையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (2) சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ மீது கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து, பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரை தாக்கி கடத்த முயன்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
மேலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக வீதி நாடகம் நடத்திய குழுவினரை தாக்கியதாகவும் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், 2014ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைக்குரிய வழக்குகளை எதிர்கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மரணத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு ஏதேனும் உள்ளதா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
எவ்வாறாயினும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தொடர்பில் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னரே தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக