மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மலேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய தனுஷ்க கௌசல்ய ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தகவல்களின்படி, 2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலும், 2016ஆம் ஆண்டு அதே பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குறித்த இரண்டு வழக்குகளும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் அவர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, 2003ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 2007ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்கிஸ்ஸ பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மலேசியாவில் அவர் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த ரத்மலானையைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரும், கல்கிஸ்ஸையைச் சேர்ந்த 31 வயதுடைய மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, “ரத்மலானே சைமா” என அழைக்கப்படும் தனுஷ்க கௌசல்ய, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “கஞ்சிபானி இம்ரான்” என்பவரின் நிதி நடவடிக்கைகளை கையாண்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கஞ்சிபானி இம்ரானின் சமூக வலைத்தள நடவடிக்கைகளை நிர்வகித்ததுடன், அவரது குரல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கஞ்சிபானி இம்ரானின் ஆலோசனையின் பேரில், “கெஹெல்பத்தர பத்மே” என அழைக்கப்படும் நபருக்கு மலேசியாவில் தலைமறைவாக இருப்பதற்கான வசதிகளை ரத்மலானே சைமா ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில காலம் பிரான்ஸில் தங்கியிருந்த “குடு அஞ்சு” என அழைக்கப்படும் நபரின் நெருங்கிய கூட்டாளியாகவும் தனுஷ்க கௌசல்ய செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் கஞ்சிபானி இம்ரானுடன் இணைந்து செயற்படத் தொடங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குடு அஞ்சு, ரத்மலானே சைமாவை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், அது தொடர்பில் கஞ்சிபானி இம்ரான் அவரை எச்சரித்த பின்னரே சைமா அவருடன் நெருக்கமாகச் செயற்படத் தொடங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மலேசியாவில் தங்கியிருந்த தனுஷ்க கௌசல்ய, நீண்ட காலமாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதல் மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மீது குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக