களுத்துறை, பாணந்துறை கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கடலில் குளிக்கச் செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர்காப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் பாணந்துறை கடற்கரைக்கு வந்திருந்த மக்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, ஜெல்லிமீன்கள் அவர்களின் உடலில் பட்டதால் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, ஒரே பிற்பகல் நேரத்தில் சிறிய அளவிலான 300க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் பாணந்துறை கடற்கரைப் பகுதிக்கு அடித்துவரப்பட்டதாக உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெல்லிமீன்களால் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சைக்காக பாணந்துரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமை தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாக கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எனவே, பாணந்துறை கடற்கரைக்கு செல்லும் மக்கள், குறிப்பாக குழந்தைகளுடன் கடலில் இறங்குபவர்கள், தற்போதைய சூழ்நிலையில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக