நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் வழக்குத் தேக்கத்திற்கு தீர்வு காணும் நோக்கில் விசேட நாடாளுமன்றக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, அதனை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சபாநாயகரிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
நாட்டில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, அவற்றுக்கான நீடித்த தீர்வுகளை ஆராய்வதற்காக பல்துறை நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை அமைப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் நீதித்துறை வழக்குத் தேக்கத்தை குறைப்பதற்காக பின்பற்றப்பட்ட நடைமுறைகளை ஆய்வு செய்து, அவற்றிலிருந்து பொருத்தமான தீர்வுகளை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதை குறைத்து, நீதியை விரைவாக வழங்கும் செயல்முறையை வலுப்படுத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக