ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சிகளிடம் தகவல்கள் மற்றும் வாக்குமூலங்களைப் பெறும் நோக்கில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணைகளுக்கு ஆதரவாக கூட்டு சிறப்புப் பொலிஸ் குழுவொன்றை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 10 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமொன்றிடமிருந்து சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் நோக்கில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த இலஞ்சத் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வங்கிக் கணக்கின் உரிமையாளராக குறிப்பிடப்படும் டபிள்யூ. டி. நிமல் பெரேரா என்பவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுவதுடன், அவரிடமிருந்தும் தொடர்புடைய பிற நபர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவராகக் கருதப்படும் முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் சமீந்திர ராஜபக்ச ஆகியோர் வெளிநாடுகளில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு எதிராக கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரூணையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனமொன்றின் ஊடாக, ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனத்திடமிருந்து சுமார் 1,454,645.54 யூரோக்கள் இலஞ்சமாக பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக